மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000.. இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு.. விரைவில் சூப்பர் அறிவிப்பு

 
1000
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்காத பயனாளிகளும் புதிதாக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. 

 

இந்த நிலையில் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியிருந்தும் உதவித் தொகை கிடைக்காத அனைத்து குடும்பப் பெண்களுக்கும் வழங்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

1000

இந்த கவன ஈர்ப்பு அறிவிப்பு மீதி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 62 லட்சம் (1.62 கோடி) விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் வெளிப்படைத் தன்மையுடன், எந்த அழுத்தமோ, குறுக்கீடோ இல்லாமல், முழுக்க முழுக்க தகுதி வாய்ந்த 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 மகளிர் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்பதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணுக்கே அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது என்றும் விண்ணப்பித்தவர்களில் 54 லட்சம் பேர் திட்ட நிபந்தனையை பூர்த்தி செய்ய வில்லை என்றும் கூறினார். மேலும், இந்த திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1,400 உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

யார் யாருக்கெல்லாம் இந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமோ அவர்களைக் கண்டறிந்து, அரசின் நிதியை கவனமுடன் கையாண்டு, மிகச் சரியான பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் கூறினார்.

Udhayanidhi

தமிழ்நாடு முழுவதுமிருந்து இதுவரை 9 லட்சத்து 24 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளதாகவும், அம்மனுக்களை, சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் ஆய்வு செய்து, நவம்பர் 30-ஆம் தேதிக்குள் உரிய தீர்வினை அளிப்பார்கள் என்றும் உறுதி அளித்தார். இந்த மேல்முறையீட்டு பணிகளை மேற்கொள்ள வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு 12.10.2023 - வருகிற வியாழக்கிழமை அன்று சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.

அதுமட்டுமல்ல, ஏற்கனவே, விண்ணப்பிக்காத பயனாளிகளும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். எந்த ஒரு தகுதியான பயனாளியின் வாய்ப்பும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின்படி அரசு மிக கவனமாக செயல்பட்டு வருவதாகவும் கூறி விளக்கம் அளித்தார்.

From around the web