மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000.. புதிதாக 11 லட்சம் பேர் மேல்முறையீடு.. அமைச்சர் உதயநிதி கொடுத்த அப்டேட்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அக்டோபர் மாதத்தில் திருநங்கைகள் உட்பட கூடுதலாக 5,041 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது.
— Udhay (@Udhaystalin) October 26, 2023
தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட… pic.twitter.com/wNiteQzYbb
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம்.
ஆய்வின்போது, அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்துக் கூறிய போது, அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை ஏற்றுக் கொண்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டோம்.” என தெரிவித்துள்ளார்.