மகளிர் உரிமைத் தொகை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

 
1000

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 323 புதிய அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். அந்த தொகை மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

1000

இந்நிலையில், திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும், போதிய அதிகாரிகளை நியமிக்கவும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் ஆணையர்களின் பரிந்துரைத்த நிலையில், அதனை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த 323 அதிகாரிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ரூ.1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உரிமைத் தொகை பெற்று வரும் நிலையில், மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வரபெற்றுள்ளதால், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

MKS

அதன்படி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, தருமபுரி மாவட்டம் கரிமங்கலம், ஈரோடு மாவட்டம் தாலவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கரூர் மாவட்டம் கடவூர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி மற்றும் சென்னை மாதவரம் ஆகிய 8 பகுதிகளுக்கு சிறப்பு வட்டாட்சியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, 38 மாவட்ட அலுவலர்கள், 94 துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 323 பணியிடங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

From around the web