மகளிருக்கு மாதம் ரூ. 3,000 உரிமைத்தொகை.. 133 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 20-ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விரைவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 133 அம்சங்கள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வலியுறுத்தப்படும் எனவும் உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வலியுறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள்..!#ADMK_VNR #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை#AIADMK_Manifesto#வெல்லட்டும்_இரட்டைஇலை pic.twitter.com/L3K67nQEGh
— சிவா (எ) செல்வக்குமார் 🌱Say No To Drugs & DMK (@admksiva582021) March 22, 2024
மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 3 ஆயிரம் வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தில், இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்களை இணைக்க வேண்டும் ஆளுநர் பதவி நியமனம் குறித்து கருத்து கேட்க வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணி சார்பில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலில் 33 இடங்களில் அதிமுக மட்டுமே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.