குழந்தை கடத்திய பெண் திடீர் மரணம்.. போலீஸ் கண்முன்னே அதிர்ச்சி.. கோவையில் நடந்தது என்ன?

 
coimbatore

திருச்செந்தூர் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் கோவை காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள மாணவாளபுரம் அம்மன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இந்த தம்பதிக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஸ் (1½ வயது) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த மாதம் 28-ம் தேதி குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் சென்றிருந்தார். அப்போது திலகவதி (40) என்பவருடன் ரதிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திலகவதியுடன், ரதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ரதியிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்ட  திலகவதி ஐஸ் கிரீம் வாங்கிக்கொடுப்பதாக தூக்கிச்சென்றார். அனால் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ரதியும் அவரது கணவரும் அப்பகுதி முழுவதும் தேடினர். 

அந்த பெண்ணையும், குழந்தையையும் மாயமானதையடுத்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசாரும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். பைக்கில் இருவர் குழந்தையை தூக்கி சென்ற காட்சிகள் சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், குழந்தையை கடத்திய தம்பதி கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

coimbatore

தகவலின் பேரில் ஆலாந்துறை போலீசார் பூண்டி முட்டத்துவயல் குளத்தேரி அருகே பதுங்கியிருந்த தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பாண்டியன் (45), அவருடைய மனைவி திலகவதி (40) என்பது தெரியவந்தது. இருவரும் குழந்தையை கடத்தியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் குழந்தையை கடத்திய திலகவதியையும், பாண்டியனையும் கோவை மாவட்டம் ஆத்தூர் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது திலகவதி, காவல் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, போளுவாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை கடத்தல் வழக்கில் கைதான பெண் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரணை கைதி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Alanthurai PS

திலகவதி உயிரிழந்ததையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. முதற்கட்ட பிரேத பரிசோதனைக்கு பின்னர் அதாவது 4 மணி நேரம் நடந்த பிரேத சோதனைக்கு பிறகு, திலகவதி விஷத்தன்மை கொண்ட பவுடரை (சயனைடு) உட்கொண்டதில் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எந்த மாதிரியான விஷத்தை உட்கொண்டார் என்பது அடுத்தக்கட்ட சோதனையில் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கோவை போலீசாரும் திலகவதி தற்கொலை தான் செய்தாரா? இல்லை ஏன் தற்கொலை முடிவை அவர் எடுக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திலகவதியின் கணவர் பாண்டியனிடம் விசாரணை நடத்தினர். இதேபோல் திருச்செந்தூரில் குழந்தையை கடத்தி எதற்காக சேலம் கொண்டுவந்தனர் என்றும் சேலத்தில் குழந்தையை வைத்து எதற்காக கோவை வந்தனர் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web