மகளின் கண்முன்னே பெண் வெட்டிக் கொலை.. விளாத்திகுளம் அருகே கொடூரம்!

 
Vilathikulam

விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவர் அவரது மகளின் முன்பே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்து உள்ள எப்போதும்வென்றான், கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னமணி. இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வைரமுத்து என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் உயிரிழந்த பின்னர், தனது பிள்ளைகளுடன் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் இவர் வசித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது வசித்திருக்கும் பகுதிக்கு ரேஷன் அட்டையை மாற்றாததால், தனது சொந்த ஊருக்கு மகளுடன் பேருந்தில் வந்து இன்று ரேஷன் பொருட்களை வாங்கியுள்ளார். மீண்டும் தான் வசிக்கும் புதுக்கோட்டை பகுதிக்குச் செல்ல மகளுடன் பேருந்து நிலையத்தில் சின்னமணி காத்திருந்ததாக தெரிகிறது.

Dead Body

அப்போது அங்கு வந்த வைரமுத்துவின் தம்பியான ராஜேஷ் கண்ணன், சின்னமணியிடம் தகராறு செய்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஷ் கண்ணன் தான் மறைத்து கொண்டுவந்த கத்தியால் சின்னமணியை வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தன் கண் முன்னே தாய் கொலை செய்யப்பட்டதைக் கண்ட அவரது மகள் அதிர்ச்சியடைந்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எப்போதும்வென்றான் போலீசார் சின்னமணியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சின்னமணியை கொன்ற அவரது கணவரின் தம்பியான ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Eppodumvenran PS

முதற்கட்ட விசாரணையில், கணவர் இறந்தவுடன் அவரது தம்பியான ராஜேஷ் கண்ணனுடன் தொடர்பில் இருந்த சின்னமணிக்கு, வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜேஸ் கண்ணன் கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாததால், ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொன்றதும் தெரியவந்துள்ளது.

From around the web