வீட்டு வாசலில் உறங்கிய 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்.. கூகுள் மேப்பால் விபரீதம்!

 
Chennai Chennai

சென்னையில் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்த பெண் வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சரிதா. இவர்களது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் வீட்டுக்கு வந்து இருந்தனர். நேற்று இரவு அனைவரும் வீட்டுக்குள் தூங்குவதற்கு இடவசதி இல்லாததால் சரிதா, உறவினர்கள் தில்லைநாயகி, மூதாட்டி ஜோதி, கௌதம் நிஷா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெளியே பாயை விரித்து தூங்கினர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் 10-வது தெருவுக்குள் கார் ஒன்று வந்தது. திடீரென அந்த கார் அதிவேகமாக வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டு இருந்த சரிதா உள்ளிட்ட 7 பேர் மீது ஏறியது. கார் ஏற்றி நசுக்கியதில் 7 பேரின் கால்களும் நசுங்கின. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இதில் 4 பேர் பெண்கள் ஆவர்.

Chennai

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது கார் நசுக்கியதால் 7 பேர் காயம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கார் ஏறியதில் சரிதா, தில்லை நாயகி ஆகிய 2 பெண்களின் கால்களிலும் எலும்புகள் உடைந்துள்ளன. இதுபற்றி கேள்விப்பட்டதும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குறுகலான சந்தில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வைசாலி பாட்டீல் என்பது தெரிய வந்தது.

women-arrest

சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர் இன்று அதிகாலை கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. கூகுள் மேப் காட்டிய வழியில் குறுகலான குடியிருப்பு பகுதியில் சந்து இருப்பது தெரியாமலேயே வைசாலி காரை ஓட்டிச் சென்று உள்ளார். அப்போது வீட்டு முன்பு தூங்கியவர்கள் மீது ஏற்றியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கூகுள் மேப்பை நம்பி சென்று முட்டுச்சந்தில் விபத்தை ஏற்படுத்திய வடமாநிலப் பெண் வைஷாலி பாட்டீல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அஜாக்கிரதை, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web