ஓடும் ரயில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்.. துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தலைமை காவலர்! வைரல் வீடியோ

 
Coimbatore Coimbatore

கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பயணியை ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (செப். 15) கோவையில் இருந்து சென்னை நோக்கி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. அப்போது அவசரமாக வந்த இரு பெண்கள் அந்த ரயிலில் ஏற முயற்சி செய்தனர். அதில் ஒரு பெண் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு பெண் ஏறும்போது தவறுதலாக ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.

Train

இதையடுத்து ரயில் சென்று கொண்டிருந்த நிலையில், தவறி விழுந்த பெண்ணை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு அந்த பெண் பயணியை நடைமேடைக்கு இழுத்து விபத்திலிருந்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.


அதனைத் தொடர்ந்து, பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்க கூடாது என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் மற்றும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

From around the web