பிரசவத்தின் போது அதிக ரத்தபோக்கு பெண் பலி.. கதறி அழும் உறவினர்கள்!

 
Tiruvarur

திருவாரூர் அருகே பிரசவத்தின் போது அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பருதலம். இவரது மனைவி ஜமீனா மேரி. இவர்களது மகள் செலஸ்டினா, அஞ்சலக எழுத்தராக கூத்தூர் அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்தார். செலஸ்டினாவுக்கும் அவரது கணவர் பாண்டியனுக்கும் திருமணமாகி ஏற்கெனவே 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பமடைந்த செலஸ்டினாவை பிரசவத்திற்காக திருவாரூர் கமலாலய மேல்கரையில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அனுமதித்தனர். 

செப்டம்பர் 6-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மறுநாள் 7-ம் தேதி முதல் செலஸ்டினாவுக்கு அதிக அளவு உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்கப்பட்ட போது, இனிமேல் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது உடனே திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர்.

Dead Body

என்ன நடக்கிறது என்பது புரியாமல் 108 ஆம்புலன்ஸ் மூலம் தங்கள் மகளை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செலஸ்டினாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும், தவறான சிகிச்சையால் ரத்தப்போக்கு நிற்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

உடனடியாக ரத்தப்போக்கை நிறுத்த மேலும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் ஐசியுவில் வைத்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், செலஸ்டினாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் 13 நாட்கள் அரசு மருத்துவமைனையில் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதன்பின் சற்று உடல்நிலை தேறிய நிலையில் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக செலஸ்டினா சற்று உடல் நிலை தேறி சிறிது தூரம் நடப்பது, குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். தங்கள் மகள் எப்படியும் பிழைத்துக் கொள்வார் என பெற்றோர் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆனால் சனிக்கிழமை மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மூத்த மருத்துவர்கள் மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக இல்லாத நிலையில், செலஸ்டினாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை. மறுநாள் காலையே செலஸ்டினா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

Police

இதனால் மனம் உடைந்து போன உறவினர்கள் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் நுழைந்து நியாயம் கேட்டுள்ளனர். தொடர்ந்து போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து உடல், பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது உறவினர்கள் அவரது உடலின் பின் கதறியபடி சென்றனர். இது குறித்து உயிரிழந்த செலஸ்டினாவின் தந்தை கூறுகையில், தனியார் மருத்துவமனையில் அலட்சியமாக சிகிச்சை அளித்ததாகவும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களாகவே வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது சகோதரிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்தம் உறைந்திருந்த புகைப்படத்தை காட்டியதால், அரசு மருத்துவமனையில் 2 பேரை சஸ்பெண்ட் செய்து வைத்திருப்பதாக பெண்ணின் சகோதரர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் செலஸ்டினாவின் உயிரிழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, வெங்கடேஷ்வரா தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவர் சாந்தி பிரியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web