திருமணமான 2 மாதங்களில் கணவர் கண் முன்னே துடிதுடித்து பலியான மனைவி.. கும்மிடிப்பூண்டி அருகே சோகம்!

கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்தவர் நாகார்ஜுனா (29). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இருவருக்கும், சென்னை திருவேற்காடு அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஸ்வ பிரியா (25) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை, தனது கணவருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்னை திருவேற்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு விஸ்வ பிரியா சென்றார். கவரப்பேட்டை - சத்யவேடு சாலையில் குருவராஜா கண்டிகை சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நாகார்ஜுனா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நாகார்ஜுனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் இந்த விபத்து காரணமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற புதுபெண் விஸ்வ பிரியா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.