லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி.. லாரியை சிறை பிடித்து உறவினர்கள் போராட்டம்.. சென்னையில் பரபரப்பு

 
chennai

பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்து உள்ள நசரத்பேட்டை யமுனா நகர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி (53). இவர் பூந்தமல்லி - பாரிவாக்கம் சாலை சந்திப்பு, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு வந்த லாரி ரேவதி மீது மோதியது.

Accident

இதனால் நிலைதடுமாறி கீழே விழந்த அவரது உடல் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனை அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். 

Avadi Traffic police

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web