பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்த பெண் புரோக்கர் கைது.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்தும், வீட்டில் வைத்தும் பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் ஒருவரை சென்னை மாநகர விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு, சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2-வது தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (70) என்ற முதியவர் சிக்கினார்.
விசாரணையில் அவர், சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த பிரபல விபசார பெண் தரகர் நதியா (37) இந்த சிறுமியை அனுப்பி வைத்ததாகவும், அதற்கு ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நதியாவை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், நதியா, ஆரம்பத்தில் கஞ்சா மற்றும் கள்ளச்சந்தையில் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் கிடைத்த பணத்தை விட பாலியல் தொழிலில் அதிக பணம் கொட்டியதால் அவரே நேரடியாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார். விபசார தடுப்பு போலீசாரிடம் சிக்கி அரசு காப்பகத்திலும் சிறிது காலம் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் வெளியே வந்த அவர், சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே.சாலையில் வசிக்கும் தனது சகோதரி சுமதி (40), அவரது 2-வது கணவர் ராமச்சந்திரன் (43) ஆகியோருடன் இணைந்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த மாயா ஒலி (29) என்ற பெண் இவர்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளார். சமூக வலைத்தளங்கள், செல்போன் செயலி மூலமாக விபசார தொழிலை விரிவுப்படுத்தினார்.
இந்த விபச்சார கும்பல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்த பெண்களையும், குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி வந்த பெண்களையும் ஆசை வார்த்தை கூறி விபசார தொழிலில் தள்ளியது. மாணவிகளையும் இந்த தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் விபசார தடுப்பு போலீசாரால் நதியாவின் சகோதரி சுமதி, அவரது கணவர் ராமச்சந்திரன், நேபாள நாட்டு பெண் மாயா ஒலி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மாணவிகளிடம் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த அசோக்குமார், முதியவர் ராமச்சந்திரன் ஆகியோர் அடிக்கடி உல்லாசம் அனுபவித்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் பஞ்சாப்பை சேர்ந்த சிங் ஒருவர் மாணவிகளை விமானத்தில் ஐதராபாத்துக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளை விபசார தொழிலில் தள்ளிய நதியா உள்ளிட்டோர் மீதும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து குழந்தைகள் நல குழு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி - கல்லூரி செல்லும் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி முடிந்தவுடன் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வருகிறார்களா? என்பதையும் பார்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.