விகடன் இணையத்தளம் முடக்கமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

விகடன் குழுமத்தை கண்டித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய அமைச்சர் எல்.முருகனிடம் புகார் அளித்து இருந்தார். இந்நிலையில் விகடன் இணையத்தளம் பல இடங்களில் தெரியவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. அதைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
”இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இது குறித்து விகடன் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது,”விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பா.ஜ.க ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பா.ஜ.க மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது. இந்த நிலையில், விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார் என்று விகடன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.