விஜய் அரசியலில் வெகு காலம் பிழைத்திருப்பாரா? 2025 ம் ஆண்டின் மிகப்பெரிய கேள்வி?
2024 இல் பார்த்த ஒரு கவனிக்க தக்க மாற்றம் தமிழக அரசியல் களம்.
திமுகவின் கட்டமைப்பு இப்போதும் இங்கு வலுவாக இருக்கிறது, முதல்வர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி இருக்கிறது அடுத்த சில ஆண்டுகளுக்கும் இருக்கும்.அதிமுக ஆட்சி விடுப்பில் இருக்கிறது, வழக்கம் போல் தேர்தல் நேரங்களில் தான் மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள்.
பாஜக அண்ணாமலையின் கல்வி விடுப்பு அவருக்கு தோதான நிலைமையை உருவாக்கவில்லை. திரும்பி வந்ததும் சாட்டையை கையில் எடுத்ததும் அவர் ரசிகர்களைக் கூட திருப்தி செய்ய முடியாத காட்சியாகிப் போனது.
நான் எப்போதும் சொல்லுவது தமிழருக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு, அங்கு தனக்கான தலைவனை தேடும் கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது.திமுக இதை உணர்ந்தே உதயை சினிமாவில் இறக்கி மக்கள் அறிமுகம் பெற செய்து ராக்கெட் வேகத்தில் துணை முதல்வர் பதவியில் அமர்த்தி இருக்கிறது.ராமராஜன் விஜயகாந்த் சரத்குமார் அருண்பாண்டியன் கருணாஸ் வரை அந்த சினிமா அறிமுகம் தான் அவர்களுக்கு பதவிகளை வாங்கி கொடுத்தது
சினிமா ஒரு நுழைவு சீட்டு, சாமான்யனுக்கு எளிதில் கிடைக்காத வாய்ப்பு அது.சீமானுக்கு கூட சினிமா ஒரு படிக்கட்டு தான். அதில் கிடைத்த அடையாளம் தான் துவக்கப் புள்ளி, பின் அதை வலுப்படுத்திக்கொண்டார்.
80 களில் தன் முதல் தேர்தலில் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் கலைஞரின் மகனாக களம் கண்டும் தோற்றது வரலாறு, ஆனால் உதய் தன் முதல் தேர்தலில் ஸ்டாலின் மகனாக இறங்கி சேப்பாக்கத்தில் செல்வாக்காய் வென்றார், அதுவும் சரித்திரம் தான்.80களில் மு.க.ஸ்டாலின் நா.பார்த்தசாரதியின் நாவலான குறிஞ்சி மலரில் அரவிந்தனாக நடித்து , அந்த டிவி தொடர் மூலம் தன் பிம்பத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்தார்.
எம் ஜி ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் அரசியல் நுழைவு கொடுத்தது சினிமா தான், ஆனால் அதில் நிலைக்க வைத்தது கள அரசியல் அனுபவமும் மக்கள் தொடர்பும் தான். சிவாஜி கணேசனுக்கு அந்த நுழைவு கிடைத்தும் ஜொலிக்க முடியாதது அவரது தனிப்பட்ட குணாதிசயம் சார்ந்த அணுகுமுறையே.
கமலுக்கு அவர் உயரம் தெரியும், அந்த அளவில் மட்டுமே அவரது அரசியல் முயற்சிகள் நிற்கின்றன.
இப்போது முதல் வரிக்கு வருகிறேன். விஜய் - இந்த காலத்து சினிமா சூப்பர் ஹீரோ, பல முதல் முறை வாக்காளர்களின் ஆதர்சம், அரசியல் பக்குவமும் முதிர்ச்சியும் இல்லாத ஒரு பெருங்கூட்டம் அவர் பின்னால் இருக்கிறது. அவருக்கான நுழைவு வாயில் படு பிரமாண்டமாக அமைந்து விட்டது.
சீரஞ்சிவிக்கு ஆந்திராவில் கிடைத்த அதே ஆரவாரமான வரவேற்பு, நான் தமிழ் நாடு எங்கும் பயணம் போன இடங்களில் புதிதாக பட்டொளி வீசி பறக்கும் தவெக கொடிகளில் தெரிகிறது. அந்த கொடிகள் தொடர்ந்து பறப்பது விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகளிலும் தன் பின்னால் இருக்கும் கூட்டத்தை தக்க வைப்பதிலும் தான் உள்ளது.
2025 என்னைப் பொறுத்த வரையில் உதய் vs விஜய் ஆண்டாக இருக்கும் என்று அனுமானிக்கிறேன்.
உதய்யின் இருப்பு அடுத்த சில ஆண்டுகளுக்கு அசைக்க முடியாதது என்பது உறுதி, விஜய் அரசியலில் வெகு காலம் பிழைத்திருப்பாரா என்பது 2025 ஆண்டு முன்னால் தமிழ் நாட்டு அரசியல் வைக்கும் ஒரு முக்கியமான் கேள்வி!
-தேவ்