எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பாரா டிடிவி தினகரன்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் விஜய் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கரூர் துயரச் சம்பவம் தமிழ்நாடு அரசியலில் புதிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக விடம் விஜய் நெருக்கம் காட்டுவதாகவும், அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சியும் இணையும் என்றும் தகவல்கள் பரவியுள்ளது. இந்த சூழலில் டிடிவி தினகரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது, கரூர் துயரச் சம்பவத்தில் முதலமைசரை பாராட்டிய டிடிவி தினகரனின் பேச்சு, அடுத்தக் கட்ட நகர்வுகளையும் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக கூட்டணி மற்றும் நாதக என்று 4 முனைப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் அதிமுக -பாஜக கூட்டணியில் சேர்ந்தால் இது மும்முனைப் போட்டியாக மாறிவிடும். டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் தனித்து விடப்படும் நிலை உருவாகும்.
கடந்த தேர்தலில் திமுக் 173 தொகுதிகளிலும் திமுக சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் 15 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். தேமுதிக, டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக வை தங்கள் பக்கம் இழுக்க ஏற்கனவே திமுக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்முனைப் போட்டி என்றால், எல்லா தரப்பு வாக்குகளையும் தங்கள் பக்கம் திருப்ப திமுக தயங்காது.
அந்த வகையில் டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக விரும்பும்.. கடந்த தடவை போட்டியிட்ட 173 தொகுதிகளிலிருந்து 150 ஆக குறைத்துக் கொண்டு மீதி 23 தொகுதிகளை புதிய கட்சிகளுக்கு கொடுக்க முன் வரலாம்.
திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர். திமுக, ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர் கழகம் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பழைய வரலாறு. ஆகவே, டிடிவி தினகரனும் ஓ.பி.எஸ்ஸும் திமுக அணிக்கு வருவது ஒன்றும் அதிர்ச்சியான அரசியல் கிடையாது.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆகக் கூடாது எனபதற்காகவே கூட்டணியிலிருந்து வெளியே வந்தார் டிடிவி தினகரன். அதே காரணத்திற்காக திமுகவை ஆதரிக்கிறேன் என்று ஒரே போடாகப் போட்டுவிடுவார் டிடிவி தினகரன்.
