கூடுதல் நிவாரணம் கிடைக்குமா? ஒன்றியக் குழு இன்று பார்வை!
ஃபெஞ்சல் புயல் வெள்ளப் பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக 2000 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் ஒன்றிய அரசின் ஆய்வுக் குழுவை அனுப்பி வெள்ள சேதத்தை மதிப்பிட்டு கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார். இதே போல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டிற்கு நேற்று வந்திருந்தனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஆய்வை செய்த குழுவினர் இன்று கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு செய்கின்றனர்.
புதுச்சேரி ஆய்வை முடித்து விட்டு முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க உள்ளனர் ஒன்றிய ஆய்வுக் குழுவினர்.
முன்னதாக பாராளுமன்றத்திலும் திமுக எம்.பி.க்கள் ஃபெஞ்சல் புயல் வெள்ள நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு 944 கோடி ருபாய் நிவாரணத் தொகை வழங்கியுள்ளாது. ஒன்றிய ஆய்வுக்குழு அறிக்கைக்குப் பின் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிவாரணத் தொகை கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.