கட்டையால் அடித்து மனைவி கொலை.. பயத்தில் கணவன் தற்கொலை.. கோத்தகிரியில் அதிர்ச்சி!

 
nilgiris

கோத்தகிரி அருகே மனைவியை கொன்ற கணவன் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்து உள்ள கோழித்துறை கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன் (40). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ராணி (35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரகுநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் ரகுநாதன் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற ரகுநாதன் இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. அவரது மகள் ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுநாதன், மகளை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து தாக்கினர்.

dead-body

இதை பார்த்து அதிர்ச்சியான ராணி கதவை திறந்து மகளை காப்பாற்றினார். பின்னர் மகன்களையும், மகளையும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார். ஆத்திரம் தீராத அவர் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ராணியின் தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

பின்னர் ரகுநாதனும் குடிபோதையில் அப்படியே படுத்து விட்டார். சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்து எழுந்த அவர், மனைவி இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். மனைவியை அடித்து கொன்று விட்டோமே என்றும், போலீசார் எப்படியும் தன்னை விசாரிப்பார்கள் என்ற பயத்திலும் இருந்த ரகுநாதன் அதிகாலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Kotagiri PS

இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ராணி இறந்த நிலையிலும், ரகுநாதன் தூக்கில் பிணமாகவும் தொங்கி கொண்டிருந்தனர்.

இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web