குழவிக் கல்லால் மனைவி அடித்துக் கொலை.. கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவன்..!

புதுக்கோட்டை அருகே குழவிக் கல்லால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டுத்தெரு ஜெ.ஜெ.காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (35). இவரது மனைவி நித்திய காமாட்சி (24). இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அஸ்வந்த் (7) என்ற மகனும், நிவாஸ்ரீ (5), புவிஅட்சரா (3) என்ற மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் பால்ராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இருந்த போதிலும் மனைவி மீது பால்ராஜ் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நித்திய காமாட்சி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அடுப்பில் இருந்த நெருப்பு கனல்களை அள்ளி அவரது முதுகில் போட்டுள்ளார். இதில் தீக்காயமடைந்த அவரை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து நித்திய காமாட்சியின் பெற்றோர் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் நித்திய காமாட்சி படுத்து தூங்கினார். அப்போது பால்ராஜ், தூங்கிக்கொண்டிருந்த நித்திய காமாட்சி தலையில் தலையணையை வைத்து குழவிக் கல்லால் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி கிடந்தார். இதையடுத்து பால்ராஜ் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி நிலையில் கிடந்தார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து நித்திய காமாட்சியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த அவரது குடும்பத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நித்திய காமாட்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பால்ராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நித்திய காமாட்சியின் தாயார் இளஞ்சியம் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு கொத்தனார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாய் இறந்தது தெரியாமல் நித்திய காமாட்சியின் 3 குழந்தைகளும் செய்வதறியாது வீட்டில் நின்று கொண்டிருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.