ஏன் இந்த அவசரம்? டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியின் பயண மர்மம்!!

 
EPS Amitshah

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, எந்தக் காரணத்தையும் செய்தியாளர்களிடமோ, கட்சி அறிக்கை வாயிலாகவோ, எக்ஸ் தளத்திலோ தெரிவிக்காமல் டெல்லிக்குச் சென்றார். அவர் ஒன்றிய உள்துறை அமித்ஷாவைத் தான் சந்திக்கப்போகிறார் என்ற உண்மையை சட்டமன்றத்திலேயே உடைத்துப் பேசிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சரின் சட்டமன்றப் பேச்சு எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக இரவு 8 மணிக்கு அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. முதலில் கட்சி நிர்வாகிகளுடனும் பின்னர் தனியாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை நீக்கிவிட்டால், கூட்டணிக்கு எந்த தயக்கமும் இல்லை என்று எடப்பாடியார் கூறியுள்ளதாகத் தகவல்கள் கசிகிறது.

சட்டமன்றக்கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவசர அவசரமாக அதுவும் ரகசியமாக ஒன்றிய உள்துறை அமைச்சரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? அதிமுகவுக்கோ எடப்பாடி பழனிசாமிக்கு இப்படி ஒரு அவசரத் தேவை இருக்க வேண்டியதில்லை.பாஜக தலைமைக்குத் தான் அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை அவசரமாக வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு விவகாரத்தை அகில இந்திய அளவில் விவாதப் பொருளாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நாட்டையே உலுக்கும் வகையில் தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் பஞ்சாப் மாநிலத்தையும் அழைத்து மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார். ஆந்திராவிலிருந்து பவன் கல்யாண் கட்சிப் பிரமுகர் சென்னைக்கு வந்து விழா ஏற்பாட்டாளார்கள் வரவேற்றுச் சென்று தங்க வைத்த பிறகு, வருத்தம் தெரிவித்துவிட்டு பங்கேற்காமல் சென்றுள்ளார். இது பாஜகவின் அழுத்தத்தின் காரணம் தவிர வேறு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டில் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜக, தமாக, நாம் தமிழர் கட்சி தவிர தேசிய ஜனநாயகக் கட்சியிலிருக்கும் தமிழகக் கட்சிகள் அனைத்தும் பங்கேற்றன. இப்படியே போனால் பாஜக தமிழ்நாட்டு அரசியலில் முற்றிலுமாக தனித்துவிடப்பட்டுவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அதிமுகவை உடனடியாக வளைத்துப் போட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. 

தங்கள் வழக்கப்படியே சொல்ல வேண்டியதை சொல்லி டெல்லிக்கு வரவழைத்து செய்ய வேண்டியதை செய்து கொண்டு விட்டார்கள். இனி அதிமுக - பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் வெளியே வரும். திமுக அணிக்கு எதிராக வலுவான அணி இருப்பதாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் அதிமுக, பாஜகவுக்கு இருக்கிறது.

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை விவகாரங்களில் அதிமுகவின் நிலைப்பாடு உறுதியுடன் இருக்குமா அல்லது நீர்த்துப் போகுமா என்பதும் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

- ஸ்கார்ப்பியன்