விஜய் க்கு ஏன் ஒய் பிரிவு பாதுகாப்பு? குஷ்பு விளக்கம்!!

தவெக தலைவர் நடிகர் விஜய் க்கு ஒன்றிய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. பிரசாந்த் கிஷோர் பார்த்துச் சென்ற உடனேயே இந்தப் பாதுகாப்பு வழங்கியிருக்கிறார்களே என்றெல்லாம் கேட்கப்படுகிறது.
முன்னதாக அண்ணாமலை விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வந்ததால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார். தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான நடிகை குஷ்பு,
”சினிமா துறையில் விஜய் மிகப்பெரிய நடிகர். அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பு தேவை இருக்கிறது. தற்போது அவர் அரசியலில் இருப்பதால் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை." என்று கூறியுள்ளார்.
பாஜகவினர் வலிந்து கருத்து தெரிவித்து வருவது தான் பலருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. விஜய் யின் நடவடிக்கைகளை கண்காணிக்கவே இந்தப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இது குறித்து நடிகர் விஜய் எந்தக்கருத்தும் சொல்லவில்லை. அவர் கேட்டாரா, ஒன்றிய அரசே கொடுத்ததா என்ற விளக்கம் எதுவும் விஜய் தரப்பிலிருந்து வரவில்லை. மேலும், இந்தப் பாதுகாப்பு செலவுத் தொகையை விஜய் ஒன்றிய அரசுக்கு செலுத்துகிறாரா என்ற தகவலும் இல்லை.