மனமில்லாமல் ஏன் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்! முதலமைச்சர் விளாசல்!!

 
RN Ravi

2025ம் ஆண்டில் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவைக்கு வந்த சில நிமிடங்களிலேயே ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறிச் சென்றார்.  தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி ஆளுநர் மாளிகையிலிருந்து எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது. உடனே அது நீக்கவும் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆளுநரின் செயலைக் கண்டிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.@rajbhavan_TN

கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

From around the web