யார் அந்த 'சூப்பர் சி.எம்' ? சூர்யா கிருஷ்ணமூர்த்தி விளக்கம்!!

இன்று பாராளுமன்ற விவாதத்தின் போது ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சூப்பர் சி.எம். என்று குறிப்பிட்டார். இது குறித்து சமூகத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
திமுக தகவல் தொடர்பு பிரிவு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி யார் சூப்பர் சி.எம். என்ற தலைப்பிட்டு மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையேயான கடிதப் பரிமாற்றத்தை வரிசைப்படுத்திக் கூறியுள்ளார்.
”PMSHRI பள்ளிகளை ஏற்காவிட்டால், அதற்கான நிதியை மட்டுமின்றி பல ஆண்டுகளாக வழங்கி வந்த SSA நிதியையும் நிறுத்துவோம் என்று பாஜக அரசு மிரட்டுகிறது. ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் பரிந்துரைகள் அடிப்படையில் PMSHRI பள்ளிகளை ஏற்கிறோம் என்று மார்ச் 2024 இல் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது.
ஒன்றிய அரசு அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், NEP 2020 அமல்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை திருத்தி, திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றால் கையெழுத்து போடுகிறோம், இல்லையென்றால் முடியாது என்று ஜூலை 2024 இல் மீண்டும் கடிதம் எழுதியது தமிழ்நாடு அரசு.
ஒப்பந்தத்தை திருத்தும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு இல்லை என்று ஆகஸ்ட் 2024 இல் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதினார். திருத்தவில்லை என்றால் ஏற்க முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லிவிட்டார்.
தற்போது முதல் கடிதத்தை மட்டும் குறிப்பிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்த கோரியதையும், அதை மறுத்து தான் எழுதிய கடிதத்தையும் மறைத்துவிட்டு, 'யார் அந்த சூப்பர் சி.எம் ?' என்று நாடாளுமன்றத்தில் சவுண்டு விட்டிருக்கிறார் பாஜக அமைச்சர்.
நாடே ஏற்றுக்கொண்டாலும், தமிழ்நாட்டிற்கு தீங்கான ஒப்பந்தத்தை திருத்துவேன், மறுத்தால் ஏற்க மாட்டேன் என்று மக்களுக்காக நிற்கும் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தான், அந்த சூப்பர் சி.எம்.” என்று கூறியுள்ளார் சூர்யா கிருஷ்ணமூர்த்தி.