யார், யாருக்கு பொங்கல் பரிசு ரூ. 1,000 கிடையாது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பொங்கல் பரிசு 1,000 ரூபாய் யார் யாருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. அந்த வகையில் பொங்கல் தொகுப்போடு சேர்ந்து ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகை கடந்தாண்டு வழங்கப்பட்டது.
இதனையடுத்து இந்தாண்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கத்தொகை வழங்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள், ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகை ரூ1,000 வழங்கப்படாது. ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பரிசுத் தொகை பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ.1,000 தொகையானது பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.