கைலாசா நாடு எங்கே இருக்கு? வரும் 21-ம் தேதி அறிவிக்கிறார் நித்யானந்தா!

 
NIthyananda NIthyananda

கைலாசா நாடு எங்கே உள்ளது என்பது குறித்து நித்யானந்தா அறிவிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை. மேலும் அந்த நாட்டுக்கென தனி பாஸ் போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறி இது - தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவரது சிஷ்யைகள் பதிவிட்டனர். அதோடு, கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்து உள்ளதாக கூறியிருந்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா பெண்  பிரதிநிதிகள் பங்கேற்று பேசியது பெரும் பபரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Kailasa

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கைலாசா சார்பில் பேசிய பெண் பிரதிநிதிகளின்  பேச்சு நீக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அறிவிக்கப்பட்டது. இல்லாத ஒரு நாட்டின் பெயரில் நித்யானந்தாவும், அவரது சிஷ்யைகளும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் குற்றம் சாட்டிவந்தனர்.

இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கைலாசா திறக்கப்பட்டுள்ளது.

nithyananda

வருகிற 21-ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் கைலாசா எங்கே உள்ளது என்ற கேள்விக்கு 21-ம் தேதி விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web