மழைக்காக ஒதுங்கிய போது.. மின்னல் தாக்கி 2 பேர் பலி.. இறுதி சடங்கிற்கு சென்ற போது நடந்த சோகம்!

 
Melur

மேலூர் அருகே இறுதி ஊர்வலத்தின்போது மின்னல் தாக்கியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பூஞ்சுத்தி அடுத்துள்ள கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி அய்யம்மாள் (60). இவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மூதாட்டியின் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்று மயானத்திற்கு கொண்டுச் செல்லும் போது அப்பகுதியில், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. 

Lightning

இதில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மழைக்காக புளிய மரத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்டோர் நின்று உள்ளனர். அப்போது மின்னல் தாக்கியதில், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வா மற்றும் இளையராஜா என்ற அக்னி ராஜா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Melur PS

இதுகுறித்து மேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இறந்தவர் உடலை சுமந்து சென்ற போது மின்னல் தாக்கியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web