அதிவேகமாக வந்த பைக்கில் வீலிங்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.!!
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து உள்ள மின்னூர் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி இருசக்கர வாகனம் சென்று கொண்டு இருந்தது. அப்போது இருசக்கர வாகனம் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்பூர் ரபீக் நகர் பகுதியைச் சேர்ந்த அசீம் (21) மற்றும் புதுமனைப் பகுதியை சேர்ந்த ஷாமித் (22) ஆகிய இரண்டு இளைஞர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசார், விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.