பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

 
Udhayanidhi-Modi

நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். இந்த நிலையில் இன்று மதியம் ஒன்றரை மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சரான கிரிராஜ் சிங்கை அமைச்சர் உதயநிதி டெல்லி கிருஷி பவனில், சந்தித்துப் பேசினார். 

அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் மேம்பாடு, திறன் மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே எஸ். விஜயன், திமுக எம்.பி கௌதம் சிகாமணி, ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

Udhayanidhi-Modi

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில், பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.  பிரதமர் உடனான இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருடனான சந்திப்புக்கு பின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். நீட் தேர்வு குறித்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசினேன். நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். 

Udhayanidhi

தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அடுத்த முறை கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துமாறும் கோரிக்கை வைத்தேன். ஒன்றிய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன் என்றார்.

From around the web