பங்காளிக்கு பயந்து பகையாளியிடம் சிக்கினால் என்னாகும்? சிந்திக்கிறாரா விஜய்?
கரூர் துயரச் சம்பவத்தில் சரியான அரசியல் அனுபவம் இல்லாத ஆலோசகர்களின் வழிகாட்டுதல்கள் படி நடந்து கொண்டுள்ள விஜய் க்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது.
நடந்த சம்பவங்களின் துயரம் உடனடியாக விஜய்க்கு தெரிந்திருக்கவில்லை என்றாலும். திருச்சி சென்றடைவதற்குள் உடன் இருந்தவர்கள் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். விமான நிலையத்திற்கு போவதையாவது நிறுத்தி ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருக்கலாம் விஜய். ஆனால் உடன் இருந்தவர்களுக்கு இந்தப் பிரச்சனையை எப்படி அணுகுவது என்று எதுவுமே தெரியவில்லை.
பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஓட்டம் பிடித்திருக்கிறார். மற்றவர்களை விட அரசியல் அனுபவம் கொண்டவர். புதுச்சேரி முதலமைச்சரிடம் நல்ல தொடர்பு கொண்டவர். ஓட்டம் பிடிப்பதற்குப் பதில் புதுச்சேரி முதலமைச்சர் அல்லது வேறு அனுபவமிக்க மூத்த அரசியல்வாதிகளிடம் கேட்டிருந்தால், சம்பவ இடத்திற்கு போங்க, முடிந்த உதவி பண்ணுங்க என்று தான் சொல்லியிருப்பார்.
விஜய் சென்னை சென்றதை விட, கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஓட்டம் பிடித்தது தான், விஜய் க்கு முதல் கேடாக அமைந்தது. விஜய் யின் எக்ஸ் பதிவைக் கூட பதட்டத்தில் போட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். மூன்று நாட்கள் கழித்து தாடியை ட்ரிம் செய்து கொண்டு விஜய் போட்ட வீடியோ தான் பெரும் பின்னடைவை சந்தித்தது.
விரைந்து மீட்புப்பணிகளை முடுக்கிவிட்ட முதலமைச்சருக்கும் அரசுக்கும் விஜய் அந்த வீடியோவில் நன்றி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சரையே வழக்கம் போல் சவால் விடுத்துப் பேசினார். தமிழ்நாடு அரசு பழியைப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்து விடும் என்றெல்லாம் யாரோ பயங்கரமாகப் பயங்காட்டியிருப்பார்கள் போல. அரசு மீது பழியைப் போட்டு ஒன்றிய அரசு ஆதரவைப் பெறலாம் என்ற முன்யோசனையற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாள் முதல் இன்று வரையிலும் மிகவும் நிதானமாக, அரசியல் பழிவாங்கும் வகையில் எந்தக் கருத்தும் தெரிவிக்க்க வில்லை, அத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. விஜய் யை கைது செய்ய வேண்டும் என்ற அழுத்தம் கூட்டணிக்கட்சிக்குள்ளே இருந்தே வந்த போதும் நிதானமாக இருக்கிறார்.
முதலமைச்சரின் நிதானமான நடவடிக்கைகளை கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்காமல், பாஜக, காங்கிரஸ் என டெல்லியில் பேரம் நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு பெரிய நன்மை தான்.
ஆனால் தேசிய அளவில் காங்கிரஸுக்கு இருக்கும் நம்பிக்கையான தோழன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பீகாரின் லாலு பிரசாத் யாதவும் தான் அந்தக் கட்சி எப்படி புதிய அரசியல் கட்சியை நம்பி தன்னுடைய நெருங்கிய கூட்டணிக் கட்சியை விட்டு வரும் என்ற யோசனை விஜய் தரப்பில் யாருக்குமே இல்லை.
பாஜகவுடன் சேர்ந்த மாநிலக்கட்சிகள் ஒன்றாவது வளர்ந்துள்ளதாக வரலாறு உண்டா? உ.பி.யில் மாயாவதியின் பகுகுண் சமாஜ் கட்சி , மஹாராஷ்ட்ராவில் சிவசேனா, பஞ்சாபில் அகாலி தளம், கர்நாடகாவில் மத சார்பற்ற ஜனதா தளம், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் என கூட்டு சேர்ந்த கட்சிகள் அனைத்துமே கரைந்து போயிருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் தேர்தலையே சந்திக்காத ஒரு கட்சி அவர்கள் கையில் சிக்கினால் என்ன நடக்கும் என்று விஜய் க்கு தெரியாதா? பாஜக தயவில் கரூர் சம்பவ வழக்கை சிபிஐ க்கு மாற்றி விட்டால் முடிந்து விடுமா? குடுமியை தானாகக் கொண்டு ஒருத்தர் கையில் கொடுப்பது போலாகாதா?
இதையெல்லாம் விடுத்து, திமுக அரசின் நடவடிக்கைகளை தைரியமாக எதிர்கொண்டால் விஜய் கட்சியினருக்கு நிச்சயம் புத்துயிர் கிட்டும். அங்கே இங்கே என்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் நடுநிலையாளர்கள் கூட விஜய் பக்கம் சாயக்கூடும். ஒரு வேளை விஜய் கைது செய்யப்பட்டால் கூட அது அவருக்கு சாதகமாகவே முடியும் என்பதை விஜய் யைத் தவிர அனைத்து தலைவர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
இருந்தும் பங்காளியிடம் மோதுவதை விட்டு கொள்கை எதிரியான பகையாளிடம் சரணடைவது சரியான அரசியல் தானா விஜய்? எதுவானாலும் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் விஜய் க்கு நிச்சயம் இடம் உண்டு. அது எந்த மாதிரியான இடம் என்பதை காலம் தீர்மானிக்கும்.
- ஸ்கார்ப்பியன்
