லண்டன் - சென்னை விமான சேவை என்னாச்சு? ஒன்றிய அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி எம்.பி கோரிக்கை!!

சென்னையிலிருந்து லண்டனுக்கு இருந்த நேரடி விமான சேவை கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்டது.மும்பை, டெல்லி, பெங்களூரு நகரங்களுக்கு லண்டன் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், சென்னை - லண்டன் நேரடி சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.
லண்டன் - சென்னை விமான சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினர் சர் ஸ்டீபன் டிம்ஸ் கோரிக்கை வைத்தார். இதை குறிப்பிட்டு வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி ஒன்றிய விமானத் துறை அமைச்சர் கிஞ்சாப்பு இராம் மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..
”லண்டனில் வாழும் 3 லட்சத்திற்கும் மேலான தமிழர்களின் அமைப்பு (பெடரேஷன்), லண்டன் - சென்னைக்கு நேரடி விமான சேவையை வழங்க வற்புறுத்தி வருகின்றது. கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்புக்கு முன்பு சென்னை - லண்டன் நேரடி விமான சேவை இருந்து வந்துள்ளது. கோவிட்-19 பாதிப்பின் போது நிறுத்தப்பட்ட இந்த விமான சேவை மீண்டும் துவங்கப்படா மல் இருப்பது வருத்தத்திற்குரியது.
சென்னை மாநகரம், லண்டன் நகருடன் கலை, பண்பாட்டு வழியிலும், முக்கிய வியாபார தளமாகவும் இணைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு பணி நிமித்தமாகவும், மேல்கல்வி பயில்வதற்காகவும் இங்கிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் நேரடி சேவையைத் தொடங்கினால், அது நேரடி வர்த்தகத்தை மேலும் ஊக்கப்படுத்தி வளர்ச்சி பெறச் செய்யும். அங்கு வாழும் தமிழர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். சென்னை - லண்டன் நேரடி விமான சேவையை உடனடியாகத் துவக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்