நலமுடன் ஸ்டாலின்! மருத்துவமனை சென்ற பின்னணி என்ன? புதிய தகவல்கள்!!

 
CM Stalin CM Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வில் இருந்தாலும், அங்கிருந்தே அரசு நிர்வாகப் பணிகளையும் கவனித்து வருகிறார்.

லுங்கியுடன் முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மற்றும் பயன்பெறும் பொதுமக்களிடம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயலாக்கம் பற்றி கேட்டறிந்தார். துறை மற்றும் அரசு நிர்வாகம் சார்ந்த கோப்புகளைப் பார்வையிட்டு கையெழுத்திட்டார். தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மருத்துவமனையில் முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சரின் உடல்நலம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவருடைய நிர்வாகப் பணிகளை தொய்வின்றி மருத்துவமனையிலிருந்து கவனித்து வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற நாள் நடந்தவை குறித்து திமுக செய்தித் தொடர்பு செயலாளார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,

“ அண்ணன் மு.க. முத்துவுடன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமான உறவு உண்டு. அண்ணனின் மறைவு முதலமைச்சருக்கு பெரும் வருத்தத்தைத் தந்துள்ளது. அன்று முழுவதும் உணவு அருந்தவில்லை. அன்றிரவு உறக்கமும் மிகவும் குறைவாக இருந்துள்ளது. அடுத்த நாள் வழக்கம் போல் நடைப்பயிற்சி சென்ற போது லேசாக தலைச்சுற்றல் இருந்ததாக முதலமைச்சர் உணர்ந்துள்ளார்.

ஆனாலும் நேரே அண்ணா அறிவாலயத்திற்கு வந்து அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை வரவேற்று சால்வை அணிவித்து அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தார். எல்லோருடனும் பேசி முடித்த பிறகு, ஒரு அரை மணி நேரம் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டுத் தான் சென்றார்.

உடனடியான பரிசோதனைகளை முடித்து விட்டு அலுவலகம் திரும்பத்தான் முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் தொடர் பயணங்கள், உடல்சோர்வு காரணமாக ஒரிரு நாட்கள் ஓய்வெடுத்து விட்டு அனைத்து சோதனைகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். மூத்த அமைச்சர்கள் வலியுறுத்திய பிறகே முதலமைச்சர் அங்கிருந்து கொண்டே அரசுப் பணிகளை கவனித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

மேலும், மருத்துவர்களின் நடைமுறைப்படி தலைச்சுற்றலுக்கு ரத்தக்குழாய் அடைப்பு ஏதும் காரணமா என்று தெரிந்து கொள்வதற்காக ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை என்ற முடிவும் வந்து விட்டது. முதலமைச்சர் இன்றோ நாளையோ வீடு திரும்பி வழக்கம் போல பணிகளைத் தொடர்வார்” என்று கூறியுள்ளார்

From around the web