முதல் ‘ஷோ’ பார்த்தே ஆகணும்.. லியோ திரைப்படத்தை காண சுவர் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிவு!

கிருஷ்ணகிரி அருகே ‘லியோ’ படத்தை பார்க்க தியேட்டரின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தியேட்டருக்குள் செல்ல முயன்ற நடிகர் விஜயின் ரசிகரின் கால் முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பல சர்ச்சைகளை கடந்து இந்த திரைப்படம் இன்று வெளியானது. சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் படம் வெளியாகி ஓடி வருகிறது. பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் முதல் நாளில் முதல் ‘ஷோ’ பார்த்து ரசிப்பார்கள். அதன்படி அனைத்து தியேட்டர்களிலும் இன்றைய முதல் ‘ஷோ’ டிக்கெட் விற்றுத்தீர்ந்து இருந்தது. ஏராளமான ரசிகர்களுக்கு டிக்கெட் என்பது கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் இன்று விஜய் ரசிகர்கள் லியோ திரைப்படம் வெளியானதை வரவேற்று திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு குவிந்து மேளதாளங்கள் முழங்க விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திளைத்தனர். இந்நிலையில் தான் கிருஷ்ணகிரியில் உள்ள தியேட்டர்களிலும் லியோ திரைப்படம் இன்று வெளியானது.
இந்த படத்தை பார்க்க காலை முதலே ரசிகர்கள் அங்கு குவிந்தனர். முதல் நாளில் படம் பார்க்க டிக்கெட் கிடைக்காத ரசிகர்களும் தியேட்டர் முன்பு குவிந்தனர். மேலும் அவர்கள் டிக்கெட் இன்றி தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். ஆனால் தியேட்டர் ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த வேளையில் ரசிகர் ஒருவர் தியேட்டரின் பின்பகுதிக்கு சென்று காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தியேட்டருக்குள் நுழைய முயன்றார்.
அப்போது காம்பவுண்ட் சுவரில் இருந்து கீழே குதித்தபோது அந்த ரசிகரின் கால் முறிந்தது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதையடுத்து அங்கிருந்த போலீசார், தியேட்டர் ஊழியர்கள், படம் பார்க்க வந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கால் முறிவு ஏற்பட்ட நபரின் பெயர் அன்பரசு என்பதும் அவர் பச்சிகானப்பள்ளியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர் முதல் நாளிலேயே ‘லியோ’ திரைப்படத்தை பார்க்க முயன்றதும், டிக்கெட் கிடைக்காததால் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தியேட்டருக்குள் நுழைய முயன்றபோது கால் முறிந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.