பார்வை மாற்றுத்திறனாளி பெண் கொலை.. ஆசை நாயகிக்காக நகையை திருடிய கொடூரம்!

 
Madurai

உசிலம்பட்டியில் பார்வை மாற்றுத்திறனாளி பெண் கவிதாவுடன் நட்பாக பழகியவர்களே நகைக்காக அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிப் பெண் கவிதா. இவர் கணவனை இழந்த நிலையில் சக்கிமங்கலம் அருகே உள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் உசிலம்பட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

murder

இந்த நிலையில் நேற்று முன்தினம், கவிதா அவரது வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிலைமான் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். கவிதா கொலை செய்யப்பட்டதுடன் அவர் அணிந்திருந்த 10 சவரன் மதிப்பிலான செயின், மோதிரம், கம்மல் மற்றும் செல்போன் ஆகியவையும் திருடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

போலீசாரின் மேல் விசாரணையில், கவிதாவின் வீட்டருகே வசிக்கும் சிவானந்தம் என்ற இளைஞரும், கலையரசி என்ற பெண்ணும் திடீரென வெளியூர் கிளம்பிச் சென்றது தெரியவந்தது. இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் இருவர் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர். அப்போது, கலையரசிக்கும் சிவானந்தத்துக்கும் தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.

Silaiman PS

கணவனை இழந்து தனியாக வசித்து வந்த கவிதாவை, கலையரசியும் சிவானந்தமும் அடிக்கடி தனியாக வீட்டில் சந்தித்துப் பேசி வந்திருக்கிறார்கள். மேலும், கலையரசி சிவானந்தத்திடம் தனக்கு நகை வேண்டும் என நச்சரித்து வந்திருக்கிறார். இதனால் இருவரும் திட்டமிட்டு, கவிதாவை கொன்றுவிட்டு நகை உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு வெளியூருக்குச் சென்றது விசாரணையில் அம்பலமானது. விசாரணைக்குப் பின் கலையரசியையும் சிவானந்தத்தையும் வரவழைத்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web