வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு விசிட்.. துரை தயாநிதியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதி அழகிரியிடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நலம் விசாரித்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான துரை தயாநிதி அழகிரி, சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி துரை தயாநிதி அழகிரி திடீரென வீட்டில் மயங்கி சரிந்த விழுந்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னைஅப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சையைத் தொடங்கினார்கள். சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் அறுவை கிசிச்சை செய்து அடைப்புகளை நீக்கினார்கள். அதன்பின்னர் பொதுவார்டுக்கு மாற்றினார்கள். இதனிடையே மகனின் உடல் நலம் குறித்து அறிந்த உடன் முன்னாள் அமைச்சர் அழகிரியும், அவரின் மனைவியும் டிசம்பர் 7-ம் தேதிதான் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தனர்.
இதேபோல் துரை தயாநிதியின் உடல் நிலை குறித்து கேள்விப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போதே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி அழகிரியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததுடன், சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
இதனிடையே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி அழகிரி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் துரை தயாநிதி அழகிரி கிசிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு உயர்ரக கிசிச்சை மற்றும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனிடையே இன்று வேலூர் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிஎம்சி மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு கிசிச்சை பெற்று வரும் தயாநிதி அழகிரியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் என்னென்ன மருத்துவ முறைகளில் கிசிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும், உடல் நலம் குறித்தும் மூத்த மருத்துவர்களிடம் விசாரித்தார்.
துரை தயாநிதியின் உடல்நிலைக் குறித்து சிஎம்சி மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, “சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த துரை தயாநிதி கடந்த மார்ச் 14-ம் தேதி தான் சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். துரை தயாநிதியின் உடல்நிலை இப்போது முன்னேற்றமடைந்திருக்கிறது. பிசியோதெரபி சிகிச்சைக் கொடுப்பதால், உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமாக இருக்கிறார்” என்கின்றனர்.
துரை தயாநிதி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு ருத்ர தேவ் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.