பெண்களுக்கு எதிரான கொடுமைகள்! திராவிடர் கழகம் துணைப் பொதுச்செயலாளர் அறிக்கை!!
தொலைக்காட்சி விவாதங்களிலும், மாநிலம் முழுவதும் நடைபெறும் இடதுசாரி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கெடுத்து ஆணித்தரமாக கருத்துக்களை எடுத்து வைத்து, மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர் மதிவதனி. வழக்கறிஞரான இவர் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் மிக முக்கியமான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். மதிவதனியின் அறிக்கை விவரம் வருமாறு,
”தொடர்ந்து பயணிக்க உடல்நிலை தான் மிக முக்கியம் என்பதை உணர வைத்தது, கடந்த ஏழு நாட்கள் தான். எழுந்து உட்காரவே சிரமப்படும் அளவிற்கு உடல்நிலை சரியில்லை. பங்கேற்க ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளுக்கு உடல்நிலை காரணமாக தொடர்ந்து செல்லாமல் இருந்தது இதுவே முதல்முறை. உடலும் மனதும் மிகுந்த சோர்வில் இருந்து நேற்றுதான் இயல்பாக எழுந்து அன்றாடப் பணிகளை செய்ய ஓரளவு முடிந்தது.
இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த சமூக அவலம் என்று மனதளவில் சோர்வடைந்து, எதைப் பற்றியும் பேசவும் எழுதவும் தெம்பின்றி இருந்த சூழல். எந்த இடத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தாலும், அது எங்களுக்கே நடந்தது போன்ற அச்ச உணர்வுடன் தான் அதனை நினைத்து பார்க்க முடியும். இதுபோன்ற சம்பவங்களின்போது அரசு அதிக பொறுப்புணர்வுடன், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரச்சினைகள் நடக்கும்போதும் இன்னும் வீரியமாக பள்ளி, கல்லூரிகளில் செயல்பட அனைத்து வகையிலும் வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இம்முறையும் அதுவே!
இந்த ஆண்டு கடந்த ஆண்டினைவிட நிறைய பயணிக்கவும், சமூக - பாலின சமத்துவம் பற்றி பரப்புரை செய்யவும், பள்ளி - கல்லூரி மாணவர்களிடம் பாலின சமத்துவம் சார்ந்த உரையாடல்களை அதிகப்படுத்தவும், அடுத்த தலைமுறையை சமத்துவப் பாதையில் பயணிக்க செய்ய முடிந்தவற்றை செய்ய இன்னும் உறுதியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணம்.
யார் ஒருவரை பற்றியும் சிறிதளவும் தெரியாமல், விமர்சனம் என்ற பேரில் கல் எறியும் வீணர்கள் பற்றி எப்போதாவது கவலைப்படுவது உண்டு. இனி அதற்கெல்லாம் சிறிதும் செவி சாய்க்க நேரம் இல்லாத அளவிற்கு ஓட வேண்டும். நாமும் அடுத்தவர் மீது தெரிந்தோ தெரியாமலோ கல் எறியும் முன் கவனமாக இருப்போம்”, என்று திராவிடர் கழகம் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி கூறியுள்ளார்