விளவங்கோடு இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி!
விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் உறுப்பினராக பதவி வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 19-ம் தேதி விளவங்கோடு தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பட், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் தாரகை முன்னணி வகித்து வந்தார்.
இந்த நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் 91,054 வாக்குகள் பெற்று உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வி.எஸ். நந்தினி 50,880 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வி.எஸ்.நந்தினியை விட தாரகை கத்பட் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.
இந்த தேர்தலில் இரண்டாம் இடத்தை பாரதிய ஜனதா கட்சியும், மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சியும் பெற்றது. அதிமுகவிற்கு இந்த தொகுதியில் நான்காவது இடமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.