விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி திடீர் மரணம்..  முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

 
MKS

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில் பிறந்தவர் புகழேந்தி (71) விவசாயியான இவர் எஸ்எஸ்எல்சி வரை படித்துள்ளார். 1973-ம் ஆண்டு திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்த இவர் கோலியனூர் ஒன்றியச் செயலாளராக இருந்து விழுப்புரம் தெற்கு மாவட்ட பொருளாளராகவும், பின்னர் மாவட்ட அவைத் தலைவராகவும், அதன் பின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பதவிவகித்து வந்தார். 1986-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராகவும், 1989-ம் ஆண்டு கண்டமானடி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும், 1996-ம் ஆண்டு கோலியனூர்ஒன்றியக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் 2021-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் விக்கிரவாண்டி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

Pugazhendi

இந்த நிலையில் நேற்று இரவு புகழேந்திக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து,  அருகில் இருந்தவர்கள் அவரை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். புகழேந்தியின் மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.  கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக புகழேந்தியின் உடல் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. புகழேந்தியின் உடலுக்கு கண்ணீர் மல்க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி  வருகின்றனர்.

MKS

இந்த நிலையில், கடலூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின், பிரசாரக் கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து நேரடியாக காரில்  விழுப்புரத்திற்கு வருகை தந்தார். கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள புகழேந்தியின் உடலுக்கு, மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது அருகில் இருந்த புகழேந்தியின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

From around the web