விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக 4 நாட்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடா்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 10-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 64 வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 35 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே தான் மும்முனை போட்டி நிகழ்கிறது. பிரதான கட்சிகள் தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் ஜூலை 8, 9, 10 மற்றும் ஜூலை 13 ஆகிய 4 நாட்களுக்கு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “08.07.2024 காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
08.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.