விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடா்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த 10-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் இன்று அக்கட்சி கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற அராஜக விடியா திமுக ஆட்சியில் 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை கழகம் புறக்கணிக்கிறது !
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) June 15, 2024
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/1qQC3l7ijF
இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாக திறனற்ற அராஜக திமுக ஆட்சியில் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது