தகவல் வெற்றிக் கழகமாக மாறிப்போன விஜய் கட்சி! கரூர் குடும்பங்களை சந்திப்பாரா? மாட்டாரா?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறார். எம்ஜிஆர் உள்பட புதிதாக கட்சி தொடங்கிய எந்த நடிகரும் சந்திக்காத புதிய வகை நெருக்கடியாக இது அமைந்து விட்டது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிடுவதற்குத் தான் பெரும் நெருக்கடியை சந்தித்தார். அதை வெற்றிகரமாகக் கையாண்டு படத்தை மாபெரும் வெற்றிப் படமாக அவருடைய கட்சியினர் மாற்றி விட்டனர். பக்குவப்பட்ட அரசியல்வாதிகளாக தனது ரசிகர்களை மாற்றியிருந்தார் எம்.ஜி.ஆர்.
மக்கள் களத்திற்கு வராமல், கட்சி நிர்வாகிகளைக் கூட பார்ப்பதோ, தொடர்பு கொள்ளவோ செய்யாமல், கூட இருக்கும் 4 நபர்களின் சொல் படி மட்டுமே அரசியல் செய்து வந்தார் விஜய். கேரவன் மீது ஏறி சில ஊர்களில் செய்த பிரச்சாரத்திற்கு பெருந்திரளாக மக்கள் வந்தது என்னவோ உண்மை தான். அவர்கள் எல்லோரும் விஜய்க்கு ஓட்டு போடுவார்களா என்பதை யாராலும் சொல்ல இயலாது. கரூர் நிகழ்வுக்குப் பிறகு முற்றிலுமாக முடங்கியது விஜய் மட்டுமல்ல, அவருடைய கட்சி உறுப்பினர்களான ரசிகர்களும் தான். சமூகத் தளங்களில் விஜய் ரசிகர்களே விமர்சிக்கும் அளவுக்குத் தான் விஜய்யின் செயல்பாடுகள் உள்ளது.
கட்சிக்கு மாநில அளவில் தகவல் தொடர்பு அணியும் நிர்வாகிகளும் இருக்கிறார்கள். கட்சிக்கு அதிகாரப்பூர்வமான சமூகத் தள கணக்குகள் உள்ளது. ஒரு ட்வீட், ஒரு வீடியோ, ஆதவ் அர்ஜுனாவின் ஒரு பேட்டி. நிர்மல் குமாரின் ’அப்புறம் விரிவாகப் பேசலாம்’ என்ற பேட்டி என்பதைத் தவிர கரூர் நிகழ்வுக்குப் பிறகு எந்த ஒரு தகவலும் கட்சியிலிருந்து வரவில்லை. தொலைக்காட்சி ஊடகங்களிலும் கட்சி சார்பாக யாரும் பங்கேற்கவில்லை. தவெக ஆதரவாளார்கள் என்ற பெயரில் கடந்த ஒரு வாரமாக சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். இப்படி சிலர் பேசுவது விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை.
இந்நிலையில் அதிமுக அணிக்கு வந்து விட வேண்டும் என்று ஆர்.பி. உதயகுமாரும் விஜய் தலைமையில் அணி என்று டிடிவி தினகரனும் மாறி மாறி பேட்டி கொடுக்கின்றனர். கரூர் நிகழ்வைக் காட்டி விஜய் யை பாஜக வளைத்து விட்டது என்று ஆரூடங்களும் அடிபடுகிறது. சினிமாக்காரர்களுக்கு தங்களைப் பற்றிய கிசுகிசு வந்தால் மகிழ்ச்சியடைவார்கள். ஏனென்றால் அது மிகப்பெரிய செலவில்லாத விளம்பரம். இப்போது விஜய் கட்சியைப் பற்றியும் விஜய் யை பற்றியும் பேசப்படுகிற அனைத்தையும் விளம்பரமாகக் கருதுகிறார்க்ள் போலும். அதனால் தான் கட்சியிலிருந்து மறுப்போ, விளக்கமோ வரவே இல்லை.
உச்சக்கட்டமாக மாமல்லபுரத்திற்கு கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வரவழைத்து விஜய் ஆறுதல் சொல்லப்போவதாக ஒரு தகவல் வந்துள்ளது. இதற்கும் ஆதாரமோ, மூலமோ கிடையாது. தனியார் விடுதியில் தனித்தனி அறைகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் சொல்லப்போவ்தாக எல்லா ஊடகங்களிலும் செய்தியாகவே வந்துள்ளது. இதை விவாதப் பொருளாக தொலைக்காட்சி மற்றும் யூடியூப் ஊடகங்கள் ஆக்கிவிட்டனர். இதுவாவது நடக்குமா என்பது விஜய் மட்டுமே அறிந்த ரகசியம்.
எந்த உறுதியான தகவல்களும் இல்லாமல் யாரோ எங்கேயோ கசியவிட்ம் தகவல்கள் அடிப்படையில் தான் விஜய் கட்சி நடத்தப்பட்டு வருகிறது, அதிகாரப்பூர்வ தகவல்கள் கூட இல்லாமல், எங்கிருந்து வந்தது என்ற எந்த அறிகுறியும் இல்லாத சினிமா கிசுகிசு போல் வரும் தகவல்களால் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சியின் பெயரான தமிழக வெற்றிக் கழகம் என்பதை கிசுகிசு வெற்றிக் கழகம் என்று மாற்றிவிடலாம் போலிருக்கு/
- ஸ்கார்ப்பியன்
