விஜய் க்கு உள்ள கடைசி வாய்ப்பு.. தவறவிட்டால் சி.எம். கனவு அம்பேல் தான்!!
ஒரு எதிர்பாராத நிகழ்வு நடக்கும் போது தான் ஒரு தலைவன் உருவாகுகிறான் என்பது வரலாறு அறிந்த உண்மையாகும். திட்டமிட்டு பக்காவாக ஸ்கிரிப்ட் எழுதி அதன் படி நடப்பவர்கள் தலைவர்களாக வரலாற்றில் நிலைத்து நிற்பதில்லை. அந்த ஸ்கிரிப்ட்டை மீறி நடக்கும் எதிர்பாராத சூழலை எதிர் கொண்டு மக்களோடு மக்களாக இருப்பவர்கள் தான் தலைவர்களாக போற்றப்படுகிறார்கள்.
மக்களிடம் செல், மக்களிடம் படி, மக்களுக்காக செயல்படு என்று பேரறிஞர் அண்ணா தன்னுடைய கட்சியினருக்கு கோரிக்கையாக வைத்தார். அதை அப்படியே ஏற்று வழிநடப்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கொரோனா தொற்று போது அனைவரும் ஒதுங்கி இருந்த நேரத்தில் தன் கட்சியினரை ஒன்றிணைவோம் வா என்று திரட்டி மக்களுக்கான உதவிகளை செய்தார்.
ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆன பிறகு கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்குள்ளேயே சென்று உங்களுடன் இருக்கிறேன் என்று நம்பிக்கை அளித்தார். அப்படி ஒரு செயலை அவர் செய்யாவிட்டாலும் யாரும் எந்த குற்றச்சாட்டையும் வைக்கப் போவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களுடன் இருக்கிறேன் என்ற செயல் தான் அது.
கரூர் சம்பவத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய இயல்பான செயலாக இரவோடு இரவாக கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். நாங்களும் உடன் இருக்கிறோம் என்ற நம்பிக்கையே பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல் தேவையாகும்.
இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய விஜய், தன் கண் முன்னேயே ஒருவரை தூக்கிக் கொண்டு செல்வதைக் கூட பொருட்படுத்தாமல் பாட்டுப்பாடி எழுதிக் கொண்டு வந்த ஸ்கிரிப்ட்டை முழுமையாக படித்து முடித்தார். அவர் பேசுவதைக் கேட்க அங்கு யாரும் வரவில்லை என்று கூட தெரியாதா? உடனடியாக பேச்சை நிறுத்திவிட்டு, கூட்டம் கலைவதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை வைத்தால் அவருடைய ரசிகர்கள் கட்டுப்பட்டிருப்பார்கள்.
முதல் வாய்ப்பை தவறவிட்டவர், காரில் ஏறி திருச்சியும் சென்று விட்டார். கரூரிலேயே இருந்திருந்து இரண்டாம் கட்டத்தலைவர்களை முடுக்கிவிட்டு நிவாரண நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம். பாதுகாப்பு காரணம் கருதி திருச்சி சென்றுவிட்டால் கூட, அங்கேயே ஒரு ஓட்டலில் தங்கிக் கொண்டு கரூரில் மருத்துவமனைகளுக்கு தன்னுடைய மாநில மாவட்ட நிர்வாகிகளை அனுப்பியிருக்கலாம். அதையும் தவறவிட்டார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். மன வேதனையில் இருக்கிறேன். பேச இயலவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று சொல்லியிருந்தால் கூட அவர் மீது மக்களுக்கு சற்று நம்பிக்கை வந்திருக்கும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இரு பதிவு வெளியிட்டார். அதில் சற்று கூட வருத்தம் இல்லை.
மூன்று நாட்கள் கழித்து வெளியிட்ட வீடியோ உச்சக்கட்ட அபத்தம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தானதாக உணர வேண்டியுள்ளது. என்னை என்ன வேண்டும் என்றாலும் பண்ணுங்க என்று முதலமைச்சருக்கு சவால் விட்ட போதும் இது வரையிலும் தமிழ்நாடு அரசு விஜய் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. அதே சமயத்தில் 41 பேர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.
இப்போது உடன் இருக்கும் மாநில நிர்வாகிகள் அத்தனை பேரையும் கை கழுவி விட்டு, உண்மையான நண்பர்கள், நலம் விரும்பிகளை கட்சி நிர்வாகத்தில் வைத்து, கரூர் மக்களிடம் மனசார வருத்தம் தெரிவித்து, இனிமேல் இப்படி நடக்காது என்ற உறுதிமொழியைத் தந்து பிரச்சார வியூகத்தை மக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைத்தால் விஜய் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். இப்படி ஒரு மாற்றம் விஜய்யிடம் நடந்தால் அரசும் அவர் மீது வழக்குத் தொடராமல் இருக்கலாம்.
பாஜகவிடம் சரணடைந்து அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்ந்தால், அது முழுக்க முழுக்க அதிமுக, பாஜகவுக்குத் தான் நன்மையாகுமே ஒழிய விஜய்க்கு எல்லாமும் இழக்கும் வகையில் நட்டமாகத் தான் இருக்கும். 2026 தேர்தலில் தனித்து அல்லது ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டால் சில இடங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டும். விஜய் யும் சட்டமன்றம் செல்ல முடியும். அடுத்த தேர்தலில் வலிமையான கட்சியாக போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கவும் வாய்ப்பு கிடைக்கலாம்.
இருக்கும் கடைசி வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார் விஜய் என்பதைப் பொறுத்தே அவருடைய சி.எம். கனவு பலிக்குமா? அல்லது 2026 தேர்தலுடன் கரைந்து விடுமா என்று தெரியும்.
- ஸ்கார்ப்பியன்
