விஜயகாந்திற்கு ஐசியூவில் சிகிச்சை.. செயற்கை சுவாசம்.. வெளியான புதிய தகவல்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்த விஜயகாந்த், கடந்த 2005-ம் ஆண்டு தேமுதிக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். அவரது கட்சி மக்களிடையே செல்வாக்கை பெற்று வந்த நிலையில் கூட்டணி முடிவுகளால் அவரது கட்சி தொடர்ந்து நடந்த தேர்தல்களில் சோபிக்கவில்லை. இதனிடையே விஜயகாந்துக்கு பேசுவதில் பிரச்சினை, உடல்நல பாதிப்பு போன்றவற்றால் அவரால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாமல் போனதும் கட்சி தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட காலமாக அவர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
அவருக்கு அவ்வப்போது அமெரிக்காவில் சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது விரல்களுக்கு ரத்தம் ஓட்டம் போகாததால் அவை அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டன. இந்த நிலையில் விஜயகாந்துக்கு கடந்த 18-ம் தேதி மாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அவருக்கு கடுமையான சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் விஜயகாந்துக்கு சளி தொல்லை சீராவதற்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன் தினம் முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று 3வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இதை தேமுதிக கட்சி அலுவலகம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார், வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரவின. இதையடுத்து தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில் வதந்திகளை நம்ப வேண்டாம். அவருக்கு காய்ச்சல், சளிதான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல் நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிக்கவே ஐசியூ அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும், நுரையீரல் சளி பாதிப்பால் மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருந்தாலும் தாமாக சுவாசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.