மறைந்த விஜயகாந்திற்கு மே 9-ம் தேதி பத்ம பூஷன் விருது.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

 
Premalatha

மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது மே 9-ம் தேதி வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் இருந்து வருகிறது. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என 3 பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

Vijayakanth

இந்த நிலையில், சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தண்ணீர் பந்தல் திறந்துவைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 3 நாட்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நானும், விஜயபிரபாகரனும் விருது பெற டெல்லி செல்ல உள்ளோம்.

Premalatha

வெயில் காரணமாக பள்ளிகளை ஒருவாரம் தள்ளி திறக்க வேண்டும். விஜயபிரபாகர் விருதுநகர் தொகுதியில் ஒரு மாதம் தங்கியிருந்து எல்லா கிராமங்களுக்கு நேரடியாக சென்ற வேட்பாளர். எல்லா ஊர்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார்.

கேப்டனுடைய மகன் இங்கே போட்டியிடுகிறார். இந்த மண்ணின் மைந்தர் அவருக்கு கண்டிப்பாக வெற்றி வாய்ப்பை தருவோம் என்று பெண்கள், இளைஞர்கள், புது வாக்காளர்கள் அனைவரும் விஜயபிரபாகரனுக்கு வாக்களித்ததாக கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.

From around the web