விஜய் vs அண்ணாமலை! வெடிக்கிறதா புது யுத்தம்?

 
Vijay

சென்னைக்கு புதிய விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட பரந்தூர் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகளும் கிராம மக்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த மக்களுக்கு ஆதரவு தந்த நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய் இந்த மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்.

பரந்தூரை அடுத்த ஏகனாபுரத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களைச் சந்தித்தார் விஜய். விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் உங்களுடன் சேர்ந்து என்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்க விரும்புகிறேன். விமான நிலையம் தேவை தான். ஆனால் ஏன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து விட்டு  அந்தத் திட்டத்தை இங்கு கொண்டு வரவேண்டும். மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத இடமாகப் பார்த்து விமானநிலையத் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று விஜய் பேசியுள்ளார்.

இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வியாளர்கள் கேட்டபோது, விஜய் மத்திய அரசை குற்றம் சாட்டுவது சரியல்ல. மாநில அரசு கொடுத்த பட்டியலில் பரந்தூர் இருந்ததால் மத்திய அரசு அங்கே திட்டத்தை அறிவித்துள்ளது. அதிமுக அரசு கொடுத்த பட்டியலிலும் பரந்தூர் இருந்தது. விஜய் மாநில அரசிடம் தான் கேட்க வேண்டும். வேறு எங்கே விமான நிலையம் அமைக்கலாம் என்று மாற்று யோசனையை மாநில அரசிடம் விஜய் தெரிவிக்கலாம் என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

அதிமுக, தவெக, பாஜக, நாதக எல்லாம் ஓரணியில் ஒன்று திரண்டு திமுகவை எதிர்க்கலாம் என்று கருதப்படும் நிலையில் நடிகர் விஜய் யை சீண்டுவது போல் அண்ணாமலை பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக, பாஜகவின் பி டீம் இல்லை என்று நிறுவுவதற்காக போடும் வெளிவேடமா அல்லது இளைஞர்கள் விஜய் பக்கம் போகிறார்கள் என்ற வயித்தெரிச்சலில் சீமான்  விஜய் யை எதிர்ப்பது போலவே அண்ணாமலையும் எதிர்க்கிறாரா என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

From around the web