அம்பேத்கர் பெரியார் புத்தகங்களை நன்கொடை அளித்த விஜய் கட்சி!!
சென்னையில் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை நந்தனம் ஒய் எம் சி ஏ திடலில் 48 வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். வார இறுதியில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருக்கிறது. கண்காட்சித் திடலில் அமைந்துள்ள வெளி அரங்கில் புதிய புத்தக வெளியீடுகளும் நடைபெற்று வருகின்றன.
கண்காட்சியில் சிறை சீர்திருத்தப்பணிகள் துறை சார்பாக அரங்கம் அமைத்து புத்தகங்கள் நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. சிறைவாசிகளை புத்தகங்கள் படித்து நல்வழிப்படுத்தும் நோக்குடன் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் புத்தகங்களை வாங்கி சிறை வாசிகளுக்காக நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.
இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளார் புஸ்ஸி ஆனந்த் பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்களை சிறைவாசிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். பெரியார், அம்பேத்கரை தங்கள் கட்சியின் அடையாளத் தலைவர்களாக விஜய் அறிவித்த நிலையில் பெரியார், அம்பேத்கர் புத்தங்களை நன்கொடை வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.