விஜய் கட்சியில் இணைந்து செயல்பட தயார்.. ரவீந்திரநாத் பரபரப்பு பேட்டி

 
vijay - OPR

நடிகர் விஜய் உடன் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் என தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களை ரவீந்திரநாத் சந்தித்து பேசினார்.

AMMK

அப்போது அவர் பேசியதாவது, “தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அதிமுக காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. வாய்ப்பு இருந்தால் அடுத்து வரும் தோதலில் போட்டியிடுவேன். மேலும் டி.டி.வி.தினகரன் பல்வேறு உதவிகளை இங்கு செய்துள்ளவர், அனைவருக்கும் பரிச்சயமானவர். நானும் அவரும் வேறு வேறு இல்லை.

ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ், தேனியில் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். `ஓ.பி.எஸ்., தாத்தா...' என குழந்தைகள்கூட அன்போடு அழைக்கும் முகத்திற்குச் சொந்தக்காரர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பழுத்த அரசியல் அனுபவம் பெற்றவர்.

Ammk

எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காவே, ராமநாதபுரத்தில் அவர் பெயரிலேயே பல வேட்பாளர்களை போட்டியிட மனு செய்ய வைத்துள்ளனர். அந்த குழப்பத்திற்கு வேட்பு மனு பரிசீலனையிலேயே உண்மை நிலை தெரிந்துவிடும். எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் கட்சியை அபகரித்துக் கொண்டார். மேலும், நான் ஒன்றிய அமைச்சராகும் வாய்ப்பு அவரால்தான் பறிபோனது. போடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால், நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது” என்றார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பற்றி கேள்விக்கு பதிலளித்த ரவீந்திரநாத் ஜனநாயக நாட்டியில் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அன்பு சகோதர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். யார் நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தாலும் நல்ல விஷயம்தான் என்று கூறினார். விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்து தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

From around the web