தனி அணியில் விஜய்!! பழைய திட்டம் பலன் தருமா?

 
Vijay Vijay

கரூர் துயரச் சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அனைவரையுமே உலுக்கி விட்டது. கருர் காவல்துறை விசாரணை, உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை, உச்சநீதிமன்ற ஆணைப்படி சி.பி.ஐ விசாரணை என்று தொடர்கிறது. மனித உயிர்களில் இழப்பை எந்த விசாரணையாலும் ஈடு செய்ய முடியாது. பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு ஏற்பட்ட வலி நிரந்தரமானது. இப்படி ஒரு துயரம் இனிமேலும் நிகழாமல் தடுக்க முடியுமா? அரசு என்ன செய்யும்? அரசியல் கட்சிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விகளே அனைவருடைய  எண்ணத்திலும் உள்ளது.

தனிநபர் ஆணைய விசாரணை முடிவும் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு முன்மொழியப் போகும் திட்டமும் தான் எதிர்காலத்தில் இத்தகைய துயர நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கச் செய்யும் என நம்பலாம். ஆனால் இந்த துயர நிகழ்வு நடிகர் விஜய் யின் அரசியல் வாழ்க்கை மற்றும் திரை வாழ்க்கையில் அவர் மீது ஒரு பெரும் கரையை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு ஒரு துயரம் என்றால் நின்று கவனிக்காமல் ஓடிப் போய்விட்டார் என்ற வசைச் சொல்லிலிருந்து விஜய் மீண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆகும். 2021 தேர்தலில் விஜய் மீதான ‘ஓடிப் போய்விட்டார்’ என்ற வசைச் சொல் மீண்டும் மீண்டும் எதிர்தரப்பு அரசியல் கட்சிகளால் நினைவுபடுத்தப்படும்.

சி.பி.ஐ விசாரணையைத் தொடர்ந்து அதிமுக - பாஜக- தவெக கூட்டணி ஏற்படும் என்று பல்வேறு தரப்பிலிருந்து தகவல்கள் வந்தவாறு இருந்தது. எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அதை உறுதி செய்வது போலவே இருந்து வந்தது. அரசியல் கூட்டங்களில் மட்டுமல்லாமல், சட்டமன்றத்திலேயே விஜய் கட்சி எம்.எல்.ஏ போலவே எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இது அவருக்கு பின்னடைவைத் தரும் என்று நாம் உட்பட பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

கரூர் துயர நிகழ்வுக்கு முந்தைய நாள் வரையிலும் தவெக - அமமுக - ஓபிஎஸ் அணி என ஒரு கூட்டணி உருவாகும் என்று தான் பேசப்பட்டு வந்தது. இதை டிடிவி தினகரனும் பேசி இருந்தார். நேற்று டிடிவி தினகரன் மீண்டும் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்று கூறியுள்ளார். விஜய் தரப்பைப் பொறுத்தவரையிலும் கரூர் நிகழ்விலிருந்து தற்காலிகமாக மீண்டு வந்துவிட்டதைப் போல் ஒரு எண்ண ஓட்டத்தைக் காண முடிகிறது.தமிழ்நாடு அரசு தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் வைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையிலும் தவெக தரப்பில் பெரிய அரசியல் நிகழ்வுகள் இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

அதே வேளையில் 2021 தேர்தலுக்கான திட்டங்களை தீட்டத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. டிடிவி தினகரனுக்கு அப்படி ஒரு சிக்னல் வந்திருக்க வேண்டும். அதிமுக - பாஜக - தவெக கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகாது என்ற உண்மை பாஜகவுக்கும் தெரிந்திருக்க வேண்டும். இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் தங்கள் அணிக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று திமுக தரப்பிலான சர்வே கூறியுள்ளதும் பாஜக - அதிமுக தரப்பிற்கு சென்றிருக்க வேண்டும். அதனால் ஒரிஜினல் திட்டமான ‘வாக்குகளை பிரிக்கும்’ வேலையை மட்டும் விஜய் செய்தால் போதும். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்ற நிலை வந்தாலே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பாஜக - அதிமுக தரப்பில் எண்ணியிருக்கலாம். 

டிடிவி தினகரன் சொன்னது போல் விஜய் தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமைந்தால் அது அதிமுக-பாஜகவுக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுகிறது. கரூர் துயர நிகழ்வுக்குப் பிறகு விஜய் நடந்து கொண்ட விதம், குறிப்பாக முதலமைச்சருக்கு சவால் விட்டு பேசிய வீடியோ,  விஜய் மீதான நம்பிக்கையை அனைத்து தரப்பு மக்களிடையேயும் தகர்த்துள்ளது. தனி அணி கண்டாலும் விஜய் மூன்றாவது இடத்திற்குத் தான் போட்டியாக இருப்பார். நாம் தமிழர் கட்சிக்கும் தவெகவுக்குமான போட்டியாகத் தான் அது இருக்கும். அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்காளர்களை சீமான் தான் அதிகம் பெறுவார். புதிய வாக்காளர்களும் ஒட்டு மொத்தமாக விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு எதிர்பாராத நிகழ்வும் ஒரு தலைவனை அடையாளப் படுத்தும். விஜய் குறைந்த பட்சம் திருச்சியிலேயே தங்கி இருந்திருந்து இரண்டாம் கட்டத் தலைவர்களை கரூருக்கு அனுப்பி இருந்தால் கூட அவர் மீது  மக்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். அந்த சமயோசித முடிவை எடுக்கத் தவறியதால் விஜய் யின் நன்மதிப்பு குறைந்துள்ளது உண்மை என அறிய முடிகிறது. ஈகோவை துறந்து தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஒரு போன் செய்திருந்தால், விஜய்க்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது. படிப்படியாக திரைத்துறையில் ஒரு நல்ல இடத்தைப் பெற்றுத்தர உழைத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை விட விஜய் மீது அக்கறை கொண்டவர்கள் வேறு யாரும் இருக்க முடியுமா என்ன?

- ஸ்கார்ப்பியன்

From around the web