வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
வணிகர் சங்க பேரவையின் தலைவராக வெள்ளையன் செயல்பட்டு வந்தார். இவர் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது வியாபாரிகளுக்கு பல்வேறு அதிருப்தியை ஏற்படுத்தின. இதை பயன்படுத்திக் கொண்ட விக்கிரமராஜா, வணிகர் சங்க பேரமைப்பை உருவாக்கினார்.
இவர் திமுக ஆதரவாளர். விக்கிரமராஜாவுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவின் தூண்டுதலின் பேரில் வணிகர் சங்க பேரவை இரண்டாக உடைக்கப்பட்டுள்ளதாக வெள்ளையன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆரம்பத்தில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5-ம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஆனந்த் மோகன் பாய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலினின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.