சென்னையில் காய்கறி விலை சரிவு! விவசாயிகள் வேதனை!!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காய்கறி விற்பனை சென்னையில் பெருமளவில் நடைபெறுகிறது.தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வெவ்வேறு காய்கறிகள் சென்னைக்கு வருகிறது. பிற மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது.
விளைச்சல் மற்றும் வரத்து அதிகம் காரணமாக சென்னையில் கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு மாதமாக காய்கறி விலை குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பல காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, மொத்த விலையில் பீட்ரூட், முட்டைக்கோஸ் தலா ரூ.5, முள்ளங்கி ரூ.8, நூக்கல், புடலங்காய் தலா ரூ.10 என விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.
கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய் ரூ.10 ஆகவும், பீன்ஸ் ரூ.60 ஆகவும் விலை குறைந்துள்ளது. ரூ.40-க்கு மேல் விற்கப்பட்ட தக்காளி ரூ.15, ரூ.75-க்கு மேல் விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் ரூ.20 என விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
காய்கறி விலை வீழ்ச்சி சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்த போதிலும் விளைவித்த விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். செய்த செலவுக்கும் போட்ட உழைப்புக்கும் பணம் கிடைக்காமல் விவசாயிகள் பாடும் பெரும்பாடாக இருக்கிறது.