கமல்ஹாசன் எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த வள்ளுவ மாலை!!

 
Valluva Maalai

குமரி முனையில் வானுயர வள்ளுவருக்கு சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் போது கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்டது. பேரறிவுச் சிலை #StatueOfWisdom என்ற கல்வெட்டு திறக்கப்பட்டது. பட்டிமன்றம், கருத்தரங்கம் என சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். திருவள்ளுவர் சிலை நிறுவ தொடங்கப்பட்ட முயற்சிகள் மற்றும் சிலை உருவாக்கப்பட்ட விதம் என விவரித்துக் கூறிய முதலமைச்சர் வள்ளுவரையும் திருக்குறளையும் தமிழர்கள் ஏன் கொண்டாட வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

விழாவில் கமல்ஹாசன் இயற்றி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த வள்ளுவமாலை பாடல் வெளியிடப்பட்டது. வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழாவில் ‘வள்ளுவமாலை’ படைத்திட்ட கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் நன்றியும்; வாழ்த்துகளும்! என்று பதிவிட்டு பாடலை எக்ஸ் தளத்திலும் வெளியிட்டு இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், “என்னாலே இயலுமெனக் கணித்தது - செந்தமிழ்ப் பாட்டனைப் பாட்டாக்கப் பணித்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பு. என் சொல்லெனும் மலருக்கு இசையெனும் மணம் சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், பாவெழுதிய என்னையும் வாழ்த்தி எழுதிய முதலமைச்சருக்கும், இந்தத் தமிழ்ப் பணியை முன்னெடுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி. “ஆயிரமாயிரம் ஆண்டு கடப்பினும் ஆர்ப்பரித்தோதிடும் திராவிட வேதம், எங்கள் திராவிட வேதம் திருக்குறள் வாழிய வாழியவே” என்று கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் முதலமைச்சரின் பதிவை பகிர்ந்துள்ளார்.

கலைஞர் எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த செம்மொழியாம் தமிழ்மொழி பாடல் போல் இந்தப்பாடலும் தமிழர்கள் உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.


 

From around the web