முழு கொள்ளவை எட்டிய வைகை அணை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
Vaigai Dam

வைகை அணையில் 3,106 கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கனமழை கொட்டியது. தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பியது. இது விவசாயிகள் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Vaigai

இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே தேனி, திண்டுக்கல் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்படி தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று அதிகாலையில் வைகை அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

அதன்படி, வினாடிக்கு 3,106 கன அடி தண்ணீர் அணையில் உள்ள பிரதான 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

vaigai

இந்த நிலையில், தற்போது ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web